A special story related doctors warn that summer drinkers are at risk of dying from heat stroke - MGM Healthcare | Best Super-MultiSpecialty Hospital in Chennai
Back Online Media

A special story related doctors warn that summer drinkers are at risk of dying from heat stroke

18 Apr, 2023

 

கோடைக்காலத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடலின் சூட்டை குறைப்பதற்காக பீர் குடிப்பதாக மதுப்பிரியர்கள் கூறிவரும் நிலையில், ஆல்கஹால் அருந்தினால் ஹீட் ஸ்ட்ரோக்(heat stroke) வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மது அருந்தும் போது உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும் எனவும், மது போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறுவதால், ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு அடைப்புகள் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்தும், வெயில் காலத்தில் வரும் நோய்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காலையில் 11 மணி முதல் மதியம் 3 மணி வரையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மதுபானம், டீ, காபி போன்றவற்றையும் அருந்தக்கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர். மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என கூறினாலும் அதன் மீது பிரியம் கொண்டவர்கள் தொடர்ந்து அருந்தி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஏற்படும் சூட்டுடன் கூடுதலாக வெப்பத்தை அதிகரிக்கும் மது வகைகளை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து பொது அறுவை சிகிச்சை மருத்துவரும், உடல் உறுப்பு தான ஆணையத்தின் முன்னாள் அலுவலருமான அமலோற்பவநாதன்(Dr.J.Amalorpavanathan) கூறும்போது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சன் ஸ்டோக் காரணமாக இறந்து விட்டனர். இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என கூறுகின்றனர். கடும் வெயில் நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரையில் வெளியில் செல்லாதீர்கள். முடிந்தவரையில் வீடுகளிலோ, அலுவலங்களிலோ இருங்கள். எளிமையான பருத்தி ஆடையை அணிவதுடன், நிறைய தண்ணீர் குடியுங்கள்.

கடுமையான உடற்பயிற்சிகளை இந்த நேரங்களில் செய்வதை தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் செய்யுங்கள். குளுமையான இடங்களில் பணிபுரிய பாருங்கள். வேலைக்காரணமாக வெளியில் செல்ல வேண்டியதிருந்தால், நன்றாக சாப்பிட்டு விட்டு, கையில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். பெண்கள் வெளியில் செல்லும் போது கழிப்பறை இருக்காது என்பதற்காக தண்ணீர் குடிக்காமல் இருந்து விடாதீர்கள். அதனைவிட உயிர் மிகவும் முக்கியமானது.

இரு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து கார், பஸ்சில் செல்லுங்கள். மது உடல் நலத்திற்கு கேடு விளைக்கிறது. மதுவினால் பலவிதமான நோய்கள் வருகிறது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் புற்று நோய் வருவதற்கான 4 முக்கியமான காரணிகளில் மதுவும் ஒன்றாக கூறியுள்ளது. மதுவினால் கல்லீரல் பாதிப்பு என்பதையும் தாண்டி புற்றுநோய் வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே மதுவை அருந்தகூடாது.

வெயில் காலத்தில் மது அருந்தும் போது, கையில், காலில் போகும் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து அதிகளவில் வியர்வை வெளியில் வரும். மது குடித்த போதையில் இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பீர்கள். சரியான உணவு உட்கொள்ளாமல் படுத்து தூங்கி விடுவீர்கள். இதனால் மற்றவர்களை விட மது குடிப்பவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. எனவே வெயில், குளிர்காலம் என எப்போதுமே மது அருந்தாதீர்கள்.

வெயில் காலத்திற்கு உடலை குளுமையாக வைக்க நிறையத் தண்ணீர் குடியுங்கள். ஏன் மது குடிக்கிறீர்கள். நிறைய பழங்களை சாப்பிடுங்கள். பொறுப்பில்லாமல் வெயிலுக்கு பீர் குடியுங்கள் என கூறுவது பொறுப்பற்ற தனமாகும். ஆல்கஹாலின் ஒரு செயல்பாடு ரத்தக்குழாய்களை விரிவடைச் செய்வதாகும். அப்போது உங்களை அறியாமல் நீர்சத்து அதிகளவில் வெளியில் வரும். இதனால் இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தயவு செய்து சில்லுன்னு பீர் குடிக்காதீர்கள். தண்ணீர், மோர் குடியுங்கள்” என தெரிவித்தார்.

எம்ஜிஎம் மருத்துவமனையின் தலைமை ஊட்டசத்து நிபுணர் விஜயஸ்ரீ கூறும்போது, “கோடைக்காலத்தில் உடலின் நீர்சத்து அளவை சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தின் காரணமாக உடம்பில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. அத்துடன் இணைந்து சோடியம் பொட்டாசியம் போன்ற உப்புகளும் வெளியில் செல்கிறது. அதனால் தான் இளநீர், நுங்கு போன்ற தண்ணீர், சோடியம், பாெட்டாசியம் போன்ற தாதுகளும் இருக்கும் வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீரும் அதிகளவில் குடிக்க வேண்டியதில்லை. பழம் ஜூஸ் சாப்பிடும் போது சர்க்கரை அதிகளவில் இல்லாமல் உப்பும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நீர் சத்து சரியாக இருக்கும். பொதுவாக ஆல்கஹால் குடிப்பதால் எந்தக்காலமாக இருந்தாலும் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. கோடைக்காலத்தில் மது அருந்துவதால் உடல் வெப்பம் குறையும் என கூறுவது தவறான கருத்து. கோடைக்காலத்தில் குடிப்பதால் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியில் போகும்.

மது அருந்துபவர்கள் அதிகளவில் சிறுநீர் கழிப்பார்கள். இதனால் உடலில் இருந்து நீர் சத்து குறைத்து உடலில் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் என்ற பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மது அருந்தும் போது அதனை அதிகப்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறீர்கள். மனித உடலின் வெப்பநிலை அதிகமாகி வெளியில் உள்ள வெப்பத்திற்கு ஏற்ப சமன் செய்ய வியர்வை ஏற்படுத்தும்.

இது போன்ற நேரத்தில் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது மேலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தான் எப்போதும் மது குடிக்க கூடாது. ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் செல்வதில் பாதிப்புகளை உருவாக்குவதால், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் உயிரிழக்கும் நிலையும் ஏற்படும்” என எச்சரித்தார்.

Link: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/a-special-story-related-doctors-warn-that-summer-drinkers-are-at-risk-of-dying-from-heat-stroke/tamil-nadu20230418075956481481345

Recent Posts
Spine problems on rise among two-wheeler riders; expert shares factors leading to condition
19 Sep, 2024
Revolutionary Lifesaving Brain Tumor Surgery Waking Up A 51-Year-Old Woman from Coma at MGM Healthcare
7 Aug, 2024

Sign up to receive
communications from us